டாக்டர் சம்பத் - கண்ணீர் அஞ்சலி

Sunday 27 April 2014  at April 27, 2014;
டாக்டர் சம்பத் - காட்டுமன்னார்கோயிலில் இந்த பெயரை உச்சரிக்காத ஆளே இல்லை எனலாம். அய்யங்கார் சமுதாயத்தில் பிறந்து MBBS மருத்துவ பட்டம் பெற்று தன் ஆயுள் முழுவதையும் எளிய ஏழை மக்களின் சேவைக்காக அர்பணித்த மாபெரும் மனிதர். தேர்தல் முடிந்த அடுத்த நாள் டாக்டர் அவர்கள் காலமானார் என்ற செய்தி காட்டுமன்னார்கோயிலையே உலுக்கிவிட்டது. 
எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று மாணவர் பருவத்தில் கேட்கப்படும் கேள்விக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற பதில்கள் வருவது இவரை ரோல் மாடலாக நினைத்து கொண்டுதான். காய்ச்சலுக்கு கூட சென்னையிலிருந்து ஊருக்கு வந்து டாக்டர் அவர்களிடம் காட்டினால்தான் எனக்கு சரிப்பட்டு வரும். எங்கிருந்தாலும் மருத்துவம் ஒன்றுதான் ஆனால் நோய்களை diagnose செய்வதில்தான் சூட்சமமே உள்ளது. பெரிய லேப் வசதிகள் இல்லாவிட்டாலும் நோயின் தன்மை அதனுடைய வெளிப்பாடு கொண்டு அதை சரியாக ஜட்ஜ் செய்வதில் இவர் கில்லாடி. தன்னுடைய ஆயுளில் இவர் கைப்பட்டு சரியானவர்கள் லட்சோப லட்சம் பேர். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை அவர் இறந்த அன்று அவர் வீட்டில் கூடி அழுத ஏழை எளிய மக்களின் வருகையே உணர்த்தியது. 
Family doctor என்று பெருமையாக சொல்லிகொள்வேன். கடைசியாக அவரை சந்தித்தபோது சென்னைக்கு வந்தால் மடிப்பாக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். புன்னகையை பதிலாக தந்தார். என்னை எல்லாம் குழந்தையிலிருந்து பார்ப்பவர். உடம்பு சரியில்லை என்று சென்றால், சென்னையிலிருந்து எப்பொழுது வந்தாய் என்று நலம் விசாரிப்பார். அவருடைய உடலுக்கு மாலையை வைத்தபோது கண்கள் கலங்கியது. 
'நம்ம ஊர்காரங்க சென்னைக்கு போனாலும் உடம்பு சரியில்லைன்னா இங்கதான் வராங்க' என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியமான உண்மை. 
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து அவர் குடும்பம் அழுதால் அவர் நல்ல குடும்ப தலைவன். அவருக்காக உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அழுதால் அவர் நல்ல மனிதர். ஒரு ஊரே கண்ணீர் விட்டால் அவர் மாபெரும் மனிதர். 
நீங்கள் ஒரு மாபெரும் மனிதர். நீங்கள் மன்னை விட்டு நீங்கினாலும் மன்னை மாநகர மக்களின் மனதை விட்டு நீங்க மாட்டீர்கள்.

No comments:

Post a Comment