நன்றி தமிழக அரசு, பசுமை விகடன்.

Thursday, October 30, 2014  at 7:42 PM;
பசுமை விகடன் படித்துக்கொண்டிருந்தபோது கொள்ளிடத்திலிருந்து கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க கதவணைகளை கட்ட தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும்,  இந்த திட்டத்தால் காட்டுமன்னார்கோயில் விளைநிலங்கள் நல்ல பாசனம் பெறும் என்றும் இருந்தது. அட! நல்ல விஷயமாச்சே இதை எப்படி படிக்க தவறினோம் என்று கட்டுரையை மேலும் படிக்க நேர்ந்தபோது இந்த திட்டத்திற்காக நீண்ட நாட்களாக போராடி வந்த பொதுப்பணித்துரை பொறியாளர் நடராஜன், வினாயகமூர்த்தி, கண்ணன்பிள்ளை, இளங்கீரன் ஆகியோரது பங்கும் அதிகமானது என அறியமுடிகிறது.

இது ஒரு நல்ல விஷயம். இதை நான் மனமார வரவேற்கிறேன். இந்த தருணத்தில் தமிழக அரசுக்கும், பசுமை விகடனுக்கும், நடராஜன், வினாயகமூர்த்தி, கண்ணன்பிள்ளை, இளங்கீரன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியை காட்டுமன்னார்கோயில் மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறேன்.

அந்த வார பசுமை விகடனில் வந்துள்ள செய்தியையும், அதற்கு முன்னர் வந்த செய்தியையும் அப்பொழுதே இங்கே பதிவிட்டு இருக்கலாம் ஆனால் அது விகடன் காப்பிரைட்ஸ்க்கு எதிரானது என்பதால் என்னால் இந்த செய்தியை பதிவிடமுடியவில்லை. அதன்பிறகு விகடனிடம் எழுத்துபூர்வமான அனுமதி வாங்கியபிறகே, இதை வெளியிடுகிறேன். நன்றி விகடன்டாக்டர் சம்பத் - கண்ணீர் அஞ்சலி

Sunday, April 27, 2014  at 8:35 PM;
டாக்டர் சம்பத் - காட்டுமன்னார்கோயிலில் இந்த பெயரை உச்சரிக்காத ஆளே இல்லை எனலாம். அய்யங்கார் சமுதாயத்தில் பிறந்து MBBS மருத்துவ பட்டம் பெற்று தன் ஆயுள் முழுவதையும் எளிய ஏழை மக்களின் சேவைக்காக அர்பணித்த மாபெரும் மனிதர். தேர்தல் முடிந்த அடுத்த நாள் டாக்டர் அவர்கள் காலமானார் என்ற செய்தி காட்டுமன்னார்கோயிலையே உலுக்கிவிட்டது. 
எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று மாணவர் பருவத்தில் கேட்கப்படும் கேள்விக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற பதில்கள் வருவது இவரை ரோல் மாடலாக நினைத்து கொண்டுதான். காய்ச்சலுக்கு கூட சென்னையிலிருந்து ஊருக்கு வந்து டாக்டர் அவர்களிடம் காட்டினால்தான் எனக்கு சரிப்பட்டு வரும். எங்கிருந்தாலும் மருத்துவம் ஒன்றுதான் ஆனால் நோய்களை diagnose செய்வதில்தான் சூட்சமமே உள்ளது. பெரிய லேப் வசதிகள் இல்லாவிட்டாலும் நோயின் தன்மை அதனுடைய வெளிப்பாடு கொண்டு அதை சரியாக ஜட்ஜ் செய்வதில் இவர் கில்லாடி. தன்னுடைய ஆயுளில் இவர் கைப்பட்டு சரியானவர்கள் லட்சோப லட்சம் பேர். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை அவர் இறந்த அன்று அவர் வீட்டில் கூடி அழுத ஏழை எளிய மக்களின் வருகையே உணர்த்தியது. 
Family doctor என்று பெருமையாக சொல்லிகொள்வேன். கடைசியாக அவரை சந்தித்தபோது சென்னைக்கு வந்தால் மடிப்பாக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். புன்னகையை பதிலாக தந்தார். என்னை எல்லாம் குழந்தையிலிருந்து பார்ப்பவர். உடம்பு சரியில்லை என்று சென்றால், சென்னையிலிருந்து எப்பொழுது வந்தாய் என்று நலம் விசாரிப்பார். அவருடைய உடலுக்கு மாலையை வைத்தபோது கண்கள் கலங்கியது. 
'நம்ம ஊர்காரங்க சென்னைக்கு போனாலும் உடம்பு சரியில்லைன்னா இங்கதான் வராங்க' என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியமான உண்மை. 
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து அவர் குடும்பம் அழுதால் அவர் நல்ல குடும்ப தலைவன். அவருக்காக உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அழுதால் அவர் நல்ல மனிதர். ஒரு ஊரே கண்ணீர் விட்டால் அவர் மாபெரும் மனிதர். 
நீங்கள் ஒரு மாபெரும் மனிதர். நீங்கள் மன்னை விட்டு நீங்கினாலும் மன்னை மாநகர மக்களின் மனதை விட்டு நீங்க மாட்டீர்கள்.

திருமாவளவன் கடந்த (2009-2014)நாடாளுமன்ற தொகுதியில் உள்ளூர் வளர்ச்சி நிதியில் செய்த சாதனைகள்

Tuesday, April 8, 2014  at 4:48 PM;


திருமாவுக்கு மோதிரம் சின்னம்

  at 12:48 PM;

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tuesday, December 31, 2013  at 10:58 PM;
காட்டுமன்னார்கோயில் நண்பர்களுக்கும் என் அன்பு வாசகர்களுக்கும் தொடர்ந்து தளத்தை பார்வையிட்டு எனக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

ஆண்டிராய்டு ஒரு சகாப்தம்

Sunday, March 17, 2013  at 7:08 PM;
ஆண்டிராய்டு - கடந்த 4 வருடங்களுக்கு முன் வந்த முதல் போனில் இருந்து இன்று வரை இதன் வளர்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். தற்சமயம் இது ஜெல்லிபீனில் நிற்கிறது. இந்த OS ஐ பயன்படுத்தும் சாதனங்கள் பல கோடி பேர்களால் விரும்பப்படுகிறது. பல புதிய முயற்சிகளை இது தொடங்கியிருக்கிறது. இந்த சகாப்தம் எல்லையில்லா வானம் போல் பல புதுமைகளை தொழில்துறையில் புகுத்திருக்கிறது. லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு சந்தைபடுத்தப்படும் ஒரு இயங்குதளம் அதனுடைய தொலைநோக்கு திட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறதா? ஆம் என்றே சொல்லவேண்டும். 
அமெரிக்க ஆளுமை கொண்ட ஒரு கம்பெனி சிறிய மற்றும் கையடக்க சாதனங்களுக்கான இயங்குதளத்தின் மீது இருந்த மாயவலையை அறுத்திருக்கிறது. செல்போன் ஸ்மார்ட்போன் ஆன கதையில் தொடங்கிய தேடல் இப்பொழுது லேப்டாப் சாதனங்களையே குழி தோண்டிண்டிருக்கிறது என எண்ணும்போது, இதுவும் சாத்தியமோ? என நினைக்க தோன்றுகிறது. MS DOS கண்டிபிடிக்கப்பட்ட நாட்களில் நான் பிறந்திருக்கவில்லை ஆனாலும் கல்லூரியின் தொடக்க காலங்களில் கற்றிருக்கிறேன். அது வரையில் அது நீடித்தது Google தோன்றாதது ஒரு காரணமாக இருக்கலாம். கண்டுபிடிப்பை எல்லாம் காசாக்கும் குறுகிய நோக்கம் அன்றைய கார்ப்பரேட்டுகளின் எண்ணமாக இருந்து வந்தது. அதனால் அதை பயன்படுத்தும் பெரிய கம்பெனிகளை தாண்டி அது சாமானியர்களை சேரவில்லை. இன்றும் அது தொடர்கிறது, ஆனால் இப்பொழுது வேறு வடிவில்.

சாப்ட்வேர் மீது தீராத காதல் உள்ளவர்கள் தங்களுக்கான ஹார்டுவேரை தாங்களே தயாரித்து கொள்ளவேண்டும் - இது ஆலன் கே சொன்னது. இதைதான் ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய iPhone வெளியீட்டு விழாவில் நினைவு கூர்ந்தார். அவர் சாப்ட்வேர் மீது தீராத காதல் கொண்டவர், தன்னுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு ஹார்டுவேரையும் அவரே தயாரித்தார். கிளிக் வீலில் தொடங்கி டச் கெஸ்சர் வரை அவர் கண்டுபிடித்த ஹார்டுவேர் இன்டர்பேஸ் அனைத்தும் கோடிகளை வாரி வழங்கியது. உயர்குடி மக்களின் அந்தஸ்தாகி போனது அவருடைய கம்பெனியின் தயாரிப்புகள் அனைத்தும். விண்டோஸ் ஒரு பக்கம், ஆப்பிள் ஒரு பக்கம் முழுதாய் கல்லா கட்டினாலும் லினக்ஸ் மட்டும் எழுந்திருப்பதாய் தெரியவில்லை. லினக்ஸ் பெரிதாய் வரமுடியாததற்கு காரணம் அதை சார்ந்து சாப்ட்வேர் தயாரிப்பதற்கு முன்னனி நிறுவனங்கள் காட்டிய தயக்கமே எனலாம். இணையத்தின் விஸ்வருப வளர்ச்சி, இனைய மொழிகளுக்கான தேவைகள், அதனால் தோன்றிய புற்றீசல் போலான செர்வர் மொழிகள் அனைத்துக்கும் லினக்ஸ் தேவையாய் இருந்தது. அதோடு அங்கே நின்று போனது.

பல்லாண்டு கால ஆராய்ச்சி பலனாய் கண்டுபிடிக்கப்பட்ட டச் போன் ஆப்பிள் போன்களுக்கு மட்டுமே என்றும், அதனுடைய சோர்ஸ்கோட் அனைத்தும் க்லோஸ்டு சோர்ஸாகவே இருக்கும் என்ற அறிவிப்பு மற்ற தொலைபேசி கம்பெனிகளின் வயிற்றில் புளியை கறைக்க, அங்கே ஒரு நம்பிக்கை ஒளி கூகுளால் உருவானது. இதில் வியாபார நோக்கம் இருந்தாலும், தொலை நோக்கு சிந்தனையில் அது அடிபட்டுபோகிறது. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டமைப்பிற்கான ஒரு குழு கூகுளால் உருவாக்கப்பட்டது, ஆண்டிராய்டு நிறுவனத்தை ஏற்கனவே கூகுள் வாங்கியதால் அதன் தலைவர் ஆண்டி ரூபின் தலைமையில் ஆண்டிராய்டு OS ஐ தயாரிக்கும் வேலைகள் முழு மூச்சில் தொடங்கி இன்று இந்தளவுக்கு நிற்கிறது.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு கண்டுபிடிப்பு விஸ்பரூப வளர்ச்சி எடுத்து அனைவரையும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. இம்முறை மொபைல் கம்பியூட்டிங். டெஸ்க்டாப் விஷயங்களில் இல்லாத ஒன்று பெரிதாக ஒன்றும் இதில் இல்லை ஒன்றை தவிர. அது டச் கெஸ்சர்!!! அதுவும் மல்டி டச் பின்ச் உடன். கைப்பேசி என்பது ஸ்மார்ட் போன் ஆகி இப்போது பேப்லெட்டில் வந்து நிற்கிறது.  ஆனந்த விகடனில் ஹாய் மதனில் ஒரு வாசகரின் கேள்விக்கு மதன் இப்படி பதில் அளித்திருந்தார். ' என்னதான் கம்பியூட்டரில் புத்தகம் வாசிக்க முடிந்தாலும், படுத்து கொண்டு புத்தகத்தை வாசிக்கும் வசதி அதில் இல்லையே என்று சொல்லியிருந்தார். இப்போது அதே பத்திரிக்கை அப்ளிகேஷன் வடிவில் டேப்ளட்டுகளில் படுத்து கொண்டு படிக்க முடிகிறது என்றால், மொபைல் கம்யூட்டிங் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று உணர முடிகிறதா?

எனக்கு ஒரு பலமான சந்தேகம் இடையில் ஏற்பட்டது, டெஸ்க்டாப் கம்பியூட்டர்களுக்கான அப்ளிகேஷன்கள் தயாரிப்பு என்பது Cloud கம்பியூட்டிங் மூலமாக காலவாதியாக இருக்கும் நிலையில், க்ரோமியம் OS என்ற  Browser அடிப்படையில் இயங்கும் நோட்பேட்கள் சந்தையில் புதிதாய் அறிமுகப்படுத்தும் காலகட்டத்தில், மீண்டும் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் என்பது? லாஜிக் எங்கோ உதைக்கிறதே என்று ஒரு ஐயம் ஏற்பட்டது. அதற்கான விளக்கம் ஒரு நண்பர் மூலமாக உடனடியாக கிடைத்தது. அப்ளிகேஷன்கள் லட்சக்கணக்கில் இருக்க காரணம் மொபைலிட்டி என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், நவீன கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை அப்ளிகேஷன்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கியிருக்கிறது, அதோடு மட்டுமின்றி Field work செய்யும் அத்துனை நிறுவனங்களும் தங்கள் கம்பெனியின் அப்ளிகேஷன்கள் மூலமாக இன்று பேப்பரை ஒழித்திருப்பதில் பொபைல் அப்ளிகேஷன்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

சரி ஒரு வழியாக ஆண்டிராய்டு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது ஆனால் அதன் மூலம் ஹார்டுவேர் கம்பெனிகள் லாபம் அடைந்ததா என்றால், சொல்லவே தேவையில்லை கொள்ளை லாபம் பார்க்க தொடங்கிவிட்டார்கள். எப்படி இது சாத்தியம். ஆண்டிராய்டு ஸ்டாக் ரன் செய்வதற்கு இதுதான் ஹார்டுவேர் தேவை என்று கூகுளால் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. மினிமம் ஹார்டுவேர் தேவைகளுடன் ஆண்டிராய்டின் பழைய வெர்ஷன்கள் இன்றும் ரன் ஆகி கொண்டிருக்கிறது. சைனாவின் மீடியா டெக் நிறுவனத்தின் RTOS கொண்டு இயங்கும் செல்போன்கள் இப்போது அவர்களின் லேட்டஸ்ட் MT6589 சிப் செட் மூலம் ஆண்டிராய்டின் லேட்டஸ்ட வெர்ஷனை லோட் செய்ய ஆரம்பித்திருப்பது அதிநவீன தொழில் நட்ப சேவைகளை வழங்கும் ஆண்டிராய்டு ஜெல்லிபீனை சாமானியர்களும் தொட்டு அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 10,000 க்கு இனி நீங்கள் Quad core processor, 8 MP camera, 5 இன்ச் திரை, மல்டி டச், பின்ச் , வீடியோ கான்பிரன்சிங், லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் அனுபவிக்கும் வாய்ப்பு உங்கள் வசமாகிறது என்றால் இது யாருடைய சாதனை? சந்தேகமே இல்லாமல் ஆண்டிராய்டால்தான்.

இன்றைய தேதியில் ஆண்டிராய்டின் ஆண்டி ரூபினுக்கு பதிலாக Chromium OS ஐ பார்த்துகொண்டிருந்த சுந்தர் பிச்சை ஆண்டிராய்டு தலைவர் பொறுப்பை கூடுதலாக பார்க்க தொடங்கியிருக்கிறார், இது குரோமியம் OS ஐ ஆண்டிராய்டுடன் இனைக்கும் புது முயற்சி என்று எல்லாராலும் நம்ப ப்படுகிறது. விளைவுகள் எப்படி இருக்கும்? ஆண்டிராய்டு அப்ளிகேஷன்கள் இனி குரோம்புக்கில் ரன் ஆகும். குரோம்புக்கின் இயங்குதளமாக, டெஸ்க்டாப் கம்பியூட்டர்களின் இயங்குதளமாக இனி ஆண்டிராய்டு இருக்கும். எப்படி வின்டோஸ் 8 மொபலைலிலும், டெக்ஸ்டாப் கம்யூட்டர்களிலும் ரன் ஆகிறோதோ அப்படி. ஆண்டிராய்டு இயங்குதளம் இனி மொபைல் கம்பியூட்டிங்கிலிருந்து டெஸ்க்டாப் மற்றும் க்ளொல் கம்பியூட்டிங்கிற்கும் அதனுடைய வேர்களை பரவ விட்டிருக்கிறது. இது என்ன மாதியான புரட்சி
ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tech Tamil - 21

Sunday, December 2, 2012  at 12:58 AM;
டெக்னாலஜி போஸ்ட் எழுதி பல நாட்கள் ஆகிறது. முன்பு போல் சோஷியல் நெட்வொர்க்கில் வரும் அப்டேட்ஸ்களை படிக்க முடிவதில்லை. ஆனாலும் அவ்வப்போது வரும் சில டெக்னாலஜி அப்டேட்ஸ், அதை பற்றி எழுதுவதற்கு ஆர்வமூட்டுகிறது.
Windows 8 : சரியான நேரத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் வின்டோஸின் OS. டெக்ஸ்டாப் தாண்டி அல்ட்ராபுக், டேப்லெட் மற்றும் செல்லில் தன் முத்திரையை வின்டோஸ் பதிக்கவில்லையெனில், இன்றைய டிரெண்டில் அது கார்ப்பரெட் காலரோடு மட்டும்தான் நிற்கவேண்டும். தன்னுடைய Visual Studio 12 இன் Express edition ஐ டெவலப்பர்களுக்காக அது இலவசமாக வழங்கியுள்ளது என்பது ஆச்சரியமான உண்மை மற்றும் சந்தையில் தன்னுடைய அப்ளிகேஷன்களை விரிவுபடுத்தும் அவசியம் அதற்கு உள்ளது. 
ARM கூட்டணியோடு Windows 8 RT மற்றும் இண்டெல் கூட்டணியோடு Windows 8 என்பதோடு நில்லாம் தானே டெப்லட்டுகளை தயாரிக்கும் பணியில் மைக்ரோசாப்ட் இறங்கியுள்ளது. 
HTML5: அடோப் Flash க்கு ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் போல் HTML5 க்கு ஜைகம்பர்க். HTML5 கொண்டு உருவாக்கபட்ட பேஸ்புக் மொபைல் அப்ளிகேஷகள் காலை வாரிவிட கடைசியாக எல்லா பழியையும் அதன் மீது போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ஜைகம்பர்க். ஹைபிரிட் அப்ளிகேஷகள் எப்பொழுதும் நேட்டிவ் அப்ளிகேஷன் போல் இருக்காது என்பது அவர்களுடைய ஆப்பிள் ஐபோன் 4S ஆப்ஸ் மூலமே தெரிய வர, அதை ஓரங்கட்ட தொடங்கியது பேஸ்புக். HTML5 வை வைத்து காசை அள்ள நினைத்த சென்சாவுக்கு பெரிய ஏமாற்றம். 
Scala : க்ளோனிங் புராடக்டில் நிபுணத்துவம் பெற்ற சென்னையின் புகழ்பெற்ற கம்பெனி PHP யிலிருந்து Scala வுக்கு மாறியுள்ளது. JVM ஐ மையமாக கொண்டு எழுதப்பட்ட ஒரு மொழி ஸ்கேலா. JVM மொழிகள் சமீப காலமாக நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. அதில் ஸ்கேலா முக்கியமானது. கம்பைல்டு என்றுமே சேப்டிதான் ஆனால் அடைவிட 10 மடங்கு அதிவேக இண்டர்பெரேட்டர் PHP யே பெட்டர் என தோன்றுகிறது.
இன்னும் நிறைய எழுத ஆசை ஆனால் தூக்கம் வருகிறது. மீண்டும் சந்திப்போம்காட்டுமன்னார்கோயில் டைரக்டரி

Monday, November 5, 2012  at 1:52 PM;

எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் மக்கள் சக்தி இயக்கம் காட்டுமன்னார்கோயிலில் தொடங்கப்பட்ட போது நமது ஊரில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அத்தியாவாசிய தொலைபேசி எண்கள் அடங்கிய கையடக்க டைரக்ரி உருவாக்கப்பட்டு சகாய விலையில் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அப்பொழுது அது பலத்த ஆதரவை பெற்றது என்றே சொல்லலாம். அதைபோன்று மீண்டும் உருவாக்க நீண்ட நாட்களாக எனக்கு ஆசை. இம்முறை காட்டுமன்னார்கோயில் உள்ள Skynet cafe உரிமையாளர் நண்பர் ஹசனிடம் பேசியபோது அவரும் இதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். இருவரும் கலந்தாலோசித்து இதற்கான தொடக்க வேலைகளில் இறங்கினோம். முதலில் தொழில் நிறுவனங்களின் பிரிவுகள் மற்றும் தனிநபர் தொழில் பிரிவுகள் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு டிராப்ட் தயார் செய்திருக்கிறோம். 

அடுத்தபடியாக தொழில் நிறுவனங்களின் முகவரி, தொலைபேசி எண்கள் சேகரித்தல் பணியில் எத்தனை பேரை அமர்த்தலாம் என்பது பற்றி முடிவு செய்து, அவர்களை களம் இறக்கினால் பாதி வேலை முடிந்துவிடும். அடுத்தபடியாக புத்தகத்தை பிரிண்ட செய்யும் பணியையும் அதை ஆண்லைனில் ஏற்றும் பணியையும் நானே செய்கிறேன். இதற்கான ஆகும் செலவை நானே ஏற்பதாக உறுதி அளித்திருக்கிறேன். 

உங்களின் ஆலோசனைகளை எனக்கு கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.

படம் பார்த்து கவிதை சொல்லல்

Wednesday, January 25, 2012  at 11:13 PM;
பெருவெளியை நீலமாக கொண்ட பூளோகத்தில் சீன
பெரும் சுவற்றின் கோடாய் மாறுவேனோ

சமவெளி பாலைவனத்தில் மலைபோல் எழுந்து நிற்கும்
கிரேக்க பிரமிடாய் எழுவேனோ

நீக்கமற நிறைந்திருக்கும் காடுகளுக்கு நடுவே ஓடும்
அமேசான் ஆறுபோல் நடப்பேனோ

பசிபிக் பெருங்கடலின் மர்ம முக்கோணம்
பெர்முடா போல் ஆழ்ந்து போவேனோ

சாய்கோபுரமாய் சாய்வேனோ, நயாகரவாய் வீழ்வேனோ
இமயமலையாய் உருகுவேனோ, கங்கையை போல் பாய்வேனோ

தட்டையான பார்வையில் தனித்துவமாய் தெரிபவை
தவிக்க முடியதாவையாக ஆகி போகிறது

பிரமாண்டங்களை மனிதமனம் உவமையாக்குகிறது
பிரமிக்கும் கைவண்ணங்களை உள்வாங்கிகொள்கிறது

நிலை கண்ணாடியாய் நிலைநிறுத்தபட்ட வெள்ளை காகிதத்தில்
மனித மனம் கட்டவிழ்கிறது

உயிர்ப்பின் உந்துதலால் அது தனித்து எழுகிறது
வீழ்வது எழுவதெற்கேயாயினும் கை விட்டபாடில்லை

என்னுள் ஒருவன் எவன் அவன் என காணகிடைத்தேன்
காட்சி பிழையோ என என் நிழல் படைத்தேன்

குட்டியாய் இருந்தபோது கட்டிய குச்சியில் இன்றும் கட்டப்படும் யானை
போலன்றோ தட்டையாய் இருந்திருக்கிறேன் நிழலையும் காணாது

பற்றுதல் துறக்கும் நேரத்தில் படைப்பின் நோக்கம் தெரிகிறது
கைபற்றுதல் காண என் நெஞ்சம் அலைபாய்கிறது.

மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும்
காற்று விடுவதில்லை என மாசேதுங் சொன்னது இதைதானோ?

உடன் கட்டை ஏறியாவது உடனே வா

Tuesday, December 27, 2011  at 1:06 AM;
பார் போற்றும் அரசன் நான், யாரும் எனக்கு நிகரில்லை-உன்
கார் மேக கூந்தலின் பரிசத்திற்கு நானே நிற்பானில்லை

அடங்கா காட்டு யானை நான், எனக்கு கடிவாளமில்லை எனினும்- உன்
ஒடுங்கிய தேகத்தின் நினைவுகள் எனை உட்கார செய்கின்றன

வெற்றி கொள்ள நான் வாளேடுத்து போருக்கு போகும்போது-உன்
நெற்றி முத்தம் என் வெற்றி திலகமாகிறது

அடைந்தால் வெற்றி இல்லை வீரமரணம் எனும்போதும்-உனை
அடைதல் எனை உயிர்பிக்க செய்கிறது

தலைகள் பல கொய்து போரில் முன்னேறி வரும் தருவாயிலும்-உன்
கலைகள் பல எனை கவிஞனாக்குகிறது

ரத்தம் சொறிந்த என் வீரவாள்-உன்னால்
நித்தம் எழுதுகோளாகிறது

சத்தம் இல்லாமல் எதிரியை எதிர்த்து முன்னேற போகும் தருவாயில்-உன்
முத்தம் ஞாபகம் வந்தது. ஆங்கே எல்லாம் முடிந்து போயிற்று

அச்சு முறிந்து என் தேர் வீழ்ந்து நானும் விழுகிறேன், இருந்தும்-உன்
உச்சந்தலை முகர்தல் எனை எழ செய்கிறது

முயற்சிகள் தோற்று, களைப்புகள் மேலோங்கும் நேரத்திலும்-உன்
கயல்விழி பார்வை எனை நிற்கசெய்கிறது.

செங்கோல் ஊன்றி மாட்சி செய்த என்னால் இன்று
செங்குத்தாய் நிற்க கூட முடியவில்லை

ஆரிய வாள்கள் என் உடலை கிழிக்கும்போதும் -உன்
கூரிய நகங்களின் கீறல்கள்தான் நினைவுக்கு வந்தது

சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட மன்னன்-உன்னால்
சதுரங்கத்தில் வீழ்கிறேன்

தோல்வி முகத்தை என் முகமூடியாய் மாட்டுகிறேன்-உன்
தோல் சாய்ந்து கதறி அழ நினைக்கிறேன்

என் இறக்கும் தருவாய் என்பது-உன்
பிறக்கும் தருவாயில் எழுதபட்டதாகிவிட்டது

வேட்டையாட முப்படைகள் எனை சூழ்கின்றன-உன்
அப்பழுக்கழுகில்லா முகம் கடைசியாய் நினைவுக்கு

வெற்றியை மட்டுமே பார்த்த நான் இறுதியிலும்
வெற்றியைதான் பார்க்கின்றேன் உன் முகமாய்

முன் நல்லிரவில் உயிர் காற்றில் கலக்கிறது-உனை
முன்னே வரவேற்க அது தயாராகிறது

பெரும் தோட்டமும், நீர் வீழ்ச்சியும் இங்கே எனக்கே உரித்தாவன- என்
பிறவிப் பயன் என அது எனக்கு கொணரப்பட்டது

நீ இல்லாமல் என் பிறவிப்பயன் அடைதல் ஆகாது பெண்ணே
உடன்கட்டை ஏறியாவது உடனே வா